Showing posts with label தோல்வி. Show all posts
Showing posts with label தோல்வி. Show all posts

ஒருவேளை நான் தோற்றுப் போனால் ???

“முயற்சி செய்யாதவனுக்கு கடவுள் கூட உதவி செய்ய மாட்டார்” எனும் பொன்மொழி என்னுள்  சற்று அதிகமாகவே வித்திடப்பட்டுள்ளது என்றுதான் கூற வேண்டும்.

காரணம்,
 
என்னை நான் நொந்து கொள்ளும் பல சந்தர்பங்களில் என்னுடைய இயலாமைக்கான ஒரே ஒரு  காரணமாக என்னால் அடையாளப்படுத்தப்பட்டது ------

ஒரு வேளை நான் தோற்றுப் போனால்” என்கின்ற கொடிய வியாதியாகிய “பயம்”.

இவ்வுலகில் ஏராளமான சாதனைகள் நிகழ்த்தப்படாமலேயே இருப்பதற்கான காரணங்களில் தலையானது “பயம்” .  ஒரு வேளை நான்  தோற்றுப் போனால் என்கின்ற பயமே, எமது பல சாதனைகளுக்கு முட்டுக் கட்டையாக அமைந்து விடுகின்றது. 

 செய்து தோற்றுப் போவதை விட  முயற்சி செய்யாமலேயே என்னால் இது முடியாது என்று கூறி ஒதுங்கிப் போகும் மனோபாவமே எம்மில் பெரும்பாலானோருக்கு இருக்கின்றது. தோற்றுப் போவதென்பது ஒரு அனுபவமே அது நிச்சயம் வெற்றிக்கான அடித்தளத்தையே தரும் என்பதில் எனக்கு துளியும் ஐயமில்லை. 

சுமார்  ஐந்து வருடங்களுக்கு முன்னர் என்னால் பயத்தின் காரணமாக முயற்சி செய்யாமல் ஒதுங்கிப் போனதொரு விடயம் ஏற்படுத்திய  இழப்புகளின் வடு இன்றும் கூட என்னை விட்டபாடில்லை. உண்மையில் அதன் வலியும் தாக்கமும்  நான் மரணிக்கும் வரை என்னுடன் பயணிக்கும் என்பது  சத்தியமே.

முயற்சி செய்யாமலேயே,  நான் தோற்று விடுவேன் என்று நினைத்தே எம்மில் பலர் அவர்களது ஆயுளில் எந்தவொரு முயற்சியும் எடுக்காமலேயே மரணித்து விடுகின்றனர். 

ஒரு சிலரே

 “எதுவானாலும் ஒரு கை பாப்போம், என்ன உசுரா போப்போது” என்று முயற்சி செய்கின்றனர். அதில் அவர்கள் வெற்றி பெறுகிறார்களா? இல்லையா ?? என்பது விடயமல்ல. முயற்சி செய்கிறார்களே அதுதான் விடயம், அதுதான் என்னைப் பொறுத்தமட்டில் நிஜமான  வெற்றி.

“ஏன் நீ மற்றவனுக்கான  வாழ வேண்டும் ??? உனக்காக ஒரு நாள் வாழந்து பார் வாழ்க்கையின் ஆழம் புரியும்”. என்பதுதான்  காலம் காலமாக நம்மால் சொல்லப்பட்டு வரும் ஒரு வாழ்வியல் தத்துவம். 

உண்மையில் எம்மில் பலபேர் மற்றவனுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதுதான் எமது முயற்சிக்கு முதல் எதிரியாகவும் முட்டுக்கட்டையாகவும் அமைந்து விடுகின்றது. அடுத்தவனுக்காகவே வாழ்ந்து  அடுத்தவனுக்காகவே  மரணிப்பதுதான் வாழ்க்கையா ?? கொஞ்சம் சிந்திக்கலாமே ???

“நான் ஒரு வேளை தோற்றுப் போனால் மற்றவன் என்னைப் பற்றி என்ன நினைப்பான்”  என்கின்ற பய மனோபாவம்  என்னுடன் சேர்த்து பல பேரை தொற்றிக் கொண்டிருக்கின்றது என்பதுதான் எம்மில் பலர் அறியாத உண்மையாகும். 

இதிலிருந்து விடுபட்டு எப்போது ஒருவன் வெளியேறி விடுகிறானோ அன்றிலிருந்து அவனது வெற்றிக்கான அடித்தளம் இடப்படுகின்றது என்றுதான்  அர்த்தம். நிச்சயமாக வாழ்க்கையில் தோற்றுப் போவதென்பது ஒரு விடயமல்ல ஆனால் முயற்சி செய்யாமலேயே தோற்றுப் போவதுதான் கவனிக்கப்பட வேண்டிய மற்றும் களையப்பட வேண்டியதொரு விடயமாகும்.


- தொடர்ந்தும்  கதைப்போம்  இதுபோலவும் -














முட்கள் நிறைந்த பாதை......

என்னதான்யா சொல்லப் போறான், என்ற ஆவலில் தலைப்பைப் பார்த்தவுடன் நீங்கள் இதனை சொடுக்கியிருப்பீர்கள் என நினைக்கிறேன். இதுவொரு சிறுகதையாக இருக்குமோ என்றுகூட சிலர் நினைத்திருக்கக் கூடும், ஆனால் இது அவ்வாறனதொரு பதிவல்ல. தொடர்ந்து  வாசியுங்கள்  என்னுடைய கிறுக்குத்தனத்தை; 

மனிதனாகப் பிறந்து விட்டால் அவன் மீது ஏராளமான சுமைகள் ஏற்றப்படுவது இயல்பே, அதுதான் இயற்கையின் நியதியும் கூட என்பதை நாம் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளோம். உண்மையில் அந்த சுமைகளைத் தாங்குவதற்கு மனிதனால் முடியுமா என்றதொரு வினாவும் எம் மத்தியில்
தோன்றாமலில்லை. எது எவ்வாறாயினும், மனிதனால் முடியாதது என்று எதையுமே இவ்வுலகில் இறைவன் படைக்கவில்லையென்பது தெளிவே. 


காலவோட்டத்திற்கேற்ப மனிதத் தேவைகளும் மற்றும் அவனது வேகமும் அபரிதமாக அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. நிச்சயமாக அவற்றை அடைவதற்கு மனிதன் பல்வேறு தடைகளையும் தகர்த்து முற்கள் நிறைந்த கரடு முரடான பாதைகளில் பயணித்தாக வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
"யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க, எந்தன் காலம் வெல்லும் என்ற பின்பே வாங்கடா வாங்க” என்ற பாடல் வரிகள்தான் ஹாபகம் வருகின்றது  இதனைக் கிறுக்கும் போது. 


நிச்சயமான இவ்வுலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒவ்வொரு வகையான அபரிதமான திறமையொன்று மறைந்திருக்கின்றது என்பது காலம் காலமாக விஞ்ஞான ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டதொரு உண்மையாகவிருக்கின்றது. இது உண்மைதானா ?? எனக்குள்ளும் திறமையிருக்கிறதா??? என்னாலும் முடியுமா???? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் இதன் விளைவாக கேட்கப்படுகின்றன, எம்மவர்களால்.

இவை அனைத்துக்குமான ஒரே பதில் ஆம் உன்னால் முடியும். என்றவாறுதான் அமையும். திறமையென்பது இறைவன் மனிதனுக்கு கொடுத்ததொரு வரம், அதை சரியாகப் பயன்படுத்துபவன் அவன் மீது ஏற்றப்பட்டுள்ள சுமைகளைத் தாண்டி முற்கள் நிறைந்த வாழ்க்கைப் பாதையில் இலகுவாக பயணித்து சாதனையாளனாக இறுதியில் உருமாற்றம் பெறுகிறான். 

மனதில் ஆசையும் வெற்றிக்கான வெறியும் இருக்கிறவனை எந்தவொரு தடைகள் மூலமும் தடுத்த நிறுத்த முடியாது. அவனது இலக்கை நோக்கிய பணயம் எதுவென்று அவன் ஏற்கனவே தீர்மானித்திருப்பான் மேலும் அதன் வழியேதான் அவனது பயணமும் அமையப்பெறும். முட்ககைள தூரப் போட்டு முன்னேறுபவனும் அவனே. 



வெற்றியின் ருசி தெரிந்தவனுக்கு தோல்விகள் மற்றும் தடைகள் ஒரு பொருட்டல்ல. அவனுக்கு வேண்டியதெல்லாம் வெற்றி யென்ற மூன்றெழுத்து வார்த்தை. இலக்கைத் தீர்மானித்து திறமை மீது நம்பிக்கை வைத்து எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அவனது வெற்றியாகவே அவனது ஆழ் மனதில் பதிவாகின்றது. அதுவேதான் இறுதியில் அவனை 
சாதனையாளனாகவும் மாற்றுகின்றது.

தொடர்ந்து  கதைப்போம் இதுபோலவும் கிறுக்குத்தனமாக.......








அழுத்தங்களின் போக்கு !!


பிரச்சினைகளின் அழுத்தம் அதிகரிக்கும்
போதுதான் ஒரு மனிதனின் திறமை வெளிப்படுத்தப்படுகின்றது.மனிதனாகப் பிறந்து விட்டால் பிரச்சினைகள் , சிக்கல்கள் போன்றவற்றுக்கு முகங்கொடுத்துத்தானாக வேண்டுமென்பதுதான் இயற்கையின் நியதியும் கூட.பிரச்சினைகள் இல்லாத மனிதனும் இறந்த பிணமும் ஒன்றுதான் என்பது எனது கருத்து.


மனிதன் என்பவன் சாதனையாளன் .யாருக்குத்தான் பிரச்சினை இல்லை , தெருவோரத்தில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரன் முதல் வெள்ளை மாளிகையில் வாழும் ஒபாமா வரை அனைவருக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் பிரச்சினைகள் ஆட்கொள்கின்றன.


ஏதோ பிறந்தோம் , வாழ்ந்தோம் , இறந்தோம் என்றில்லாம் சவால்களுக்கும் , பிரச்சினைகளுக்கும் தீர்வைப் பெறுவதற்க்கு முற்போக்கு சிந்தனையாளர்களாக நம்மை மாற்றிக் கொண்டு முயற்சி செய்ய வேண்டும்.இதன் போது பிரச்சினைகளையும் , சவால்களையும்  எதிர்கொள்ளக் கூடிய மனோபாவம் வேறூன்ற ஆரம்பிக்கும் என்பது திண்ணம்.



ஐயோ !! இது என்னால் முடியாது !! என்று
தன்னை தாழ்த்திக் கொள்ளும் மனிதர்கள் நம்மில் எத்தனை போ் ??? உங்களை நீங்களே ஒரு கணம் சுய பரிசோதனை செய்து  கொள்ளுங்கள் நான் எப்படிப் பட்டவன் என்று ?? தன்னைப் பற்றி தான் முதலில் அறிந்து  கொள்ள வேண்டும் என்பதன் அடிப்படையே இது.

உலகத்தின் ஏதோவொரு மூலையில் ஒவ்வொரு செக்கனும் ஏதாவதொரு சாதனை நிகழ்ந்து கொண்டேதானிருக்கின்றது. எம்மைப் போன்ற மனிதர்கள்  தான் சாதித்தவர்கள் , சாதித்துத்கொண்டிருப்பவர்கள் மற்றும் எதிர்காலத்தில் சாதிக்கவிருக்கின்றவர்கள் என்பதுதான் யதார்த்தம்.



பிறக்கும் போது எவரொருவரும் பெரிய சாதனையாளனாகப் பிறப்பதில்லை ஆனால் இறக்கும் போது ஏராளமான சாதனைகளுக்கு உரித்துடையவனாகவே மனிதன் இறக்கிறான் என்பது காலஓட்டத்தில் நாம் கானும் நிதர்சனமும் கூட.

என்னைப்பொருத்தமட்டில் சாதிப்பதற்க்கு  ஊனமோ , பணமோ ஒரு தடையல்ல.வறிய குடும்பத்தில் பிறந்து சாதித்துக் காட்டிய சாதனையாளர்களை இவ்வுலகம் இனறும் நினைவு கூறிக்கொண்டேதானிருக்கின்றது.

அப்துல் கலாம் , ஆபிரஹாம் லிங்கன் போன்றவர்கள் என்னை ஈா்த்த மாமனிதர்கள் ,சாதித்துத்காட்டியவர்கள். ஐசாக் நியுட்டனின் சாதனைகளை என்னுவதற்கே ஒருநாள் வேண்டும் என்பார்கள் அந்தளவுக்கு அவர் செய்த சாதனைகள் ஏராளம். எம்மைப் போல் சாதாரன மனிதனாகப் பிறந்து சிகரத்தைத் தொட்ட மாபெரும் சாதனையாளனாக தன்னை அடையாளப்படுத்தியவர்.



பிரச்சினைகள் , தோல்விகள், சவால்கள் அழுத்தும் போதுதான் ஒரு மனிதனின்  உண்மையான பலம் , திறமை வொளிப்படுத்தப்படுகின்றது. வேறுபட்ட சிந்தனைப் போக்கின் மூலம்தான் மனிதனின் சாதனைகள் எழுச்சி பெற ஆரம்பிக்கினறன என்பதுதான் உண்மை.




நேர்த்தியான சிந்தனைகள் ஒரு மனிதனை சிகரத்தின் உச்சிக்கே  தூக்கிச்செல்கின்றன என்றதொரு  எண்ணக்கரு என்னுள் ஆழமாக பதிவிக்கப்பட்டுள்ளது மேலும் அதன் விளைவுதான் இப்பதிவும்  கூட......



-தொடர்ந்து  கதைப்போம்-










உன்னால் முடியும் !

ஏதோ சிந்தனையில் இருந்த போது தோன்றிய தலைப்புதான் “உன்னால் முடியும்” .வேறுபட்ட கோணத்தில் கிறுக்குவதென்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.அந்த அடிப்படையில்தான் இப்பதிவை எழுதுகின்றேன்.மனிதனாகப் பிறந்தால் ஏதாவதொன்றை சாதிக்க வேண்டும் என்ற சிந்தனைப் போக்கை கடைப்பிடிக்கும் பழக்கத்தை கொண்டவன்தான்  நான்.“ சாதிக்கப் பிறந்தவன் தான் மனிதன்” மனிதனால் முடியாதது என்று எதுவும் இல்லை என்று
கூட சொல்லலாம் ஆனால் கடவுளுடன் ஒப்பிட முடியாதென்பது எனது தனிப்பட்ட கருத்து.




ஏராளமான தோல்விகள் , அவமானங்கள் போன்றவற்றை சந்தித்த பெருமைக்குரியவன் என்று கூட என்னைச் சொல்லாம். சில வேளைகளில் தோல்விகள் என்னை முழுமையாக ஆட்கொண்ட சந்தர்ப்பங்களை நினைக்கும் போது என்னை அறியாமலேயே எனக்குள் ஒரு வித மாற்றத்தை உணர முடிகின்றது.








“தோமஸ் அல்வா எடிசனைப்” பற்றியதொரு ஆழ்மனப்பதிவானது  நான் நம்பிக்கை இழந்து  போகும் தருணங்களில் என்னுள் புகுந்து என்னை மீண்டும் பழைய நிலைக்கு மீட்டெடுத்த சந்தர்ப்பங்கள் ஏராளம்.எடிசனின் முயற்சியை நினைத்து நான் வியக்காத நாட்கள் குறைவு என்றுதான் கூற வேண்டும். அந்தளவுக்கு எடிசனின் முயற்சிகள் மற்றும் தோல்விச்சரித்திரங்கள் என்னுள் மிகவும் ஆழமாக வேறூன்றியிருப்பதை என்னால் கூட சில நேரங்களில் துல்லியமாக உணர்ந்து கொள்ள முடிவதில்லை என்றால்  அது மிகையில்லை.


எதையாவத சாதிக்க வேண்டும் என்ற ஆசை என்னுள் வேறூன்ற ஆரம்பித்தது எனது பாடசாலைப் பருவத்தில்தான்.பல்வேறு ஆசைகள் , எண்ணங்ளை சுமந்த காலங்கள் அவை.பசுமை கலந்த காலங்கள் மற்றும் நினைவுகளை சுமந்த பருவம் என்று கூட குறிப்பிடலாம்.பாடசாலைக் காலங்களில் பெருப்பாலான தோல்விகளை சந்தித்த அனுபவங்கள் மிகவும் குறைவென்றுதான் சொல்ல வேண்டும்.


தோல்விகள் என்னை புரட்டி எடுத்த சந்தர்ப்பங்களில் “ஏன்டா பிறந்தோம்?”
என்றதொரு  வினாவை நானும் பலமுறை கேட்டிருக்கிறேன் என்றால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை.ஆழ்மனதின் அபார சக்தி என்னுள் இதன் போது வெளிப்படுத்தப்பட்டதும் என்னையறியாமலே  நடந்ததொரு  நிகழ்வாகக் கூட இருக்கலாம்.

“முயன்றால் முடியாதது ஒன்றுமே இல்லை” தந்தையின்  அமுத மொழி அடிக்கடி என்னை விழிப்படைய வைத்த தருணங்கள் ஏராளம்.எனது வெற்றியின் பாதிப்பகுதி தந்தைக்க சமர்ப்பணமாகத்தான் செல்ல வேண்டும் என்றால் அதை மறுப்பதற்கு எனக்க எந்தவொரு தகுதியும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

“உயிர் உள்ளவரை போராடு”  எனக்கு நானே அடிக்கடி கூறிக்கொள்ளும் ஒன்று.ஏராளமான சந்தர்ப்பங்களில் என்னுடைய முயற்சிகளுக்க தக்கதொரு விளைவு கிடைத்ததில்லை என்றால் அது மிகைப்படுத்தப்படா உண்மையாகத்தான் இருக்கும்.எத்தனை முறை வெற்றி பெற்றேன்  என்பதைப் பற்றி நான் நினைத்ததை விட எத்தனை முறை தோற்றுப் போனேன் என்று நினைத்த தருணங்கள் தான் அதிகம்.


தோல்விகளைக் கண்டு சோர்ந்து போன காலங்ளை நினைத்துப் பார்க்கும் போது என் மீது எனக்குக் கூட ஒருவித வெறுப்புணர்ச்சி ஏற்படுகின்றது.தோல்விகள்தான்  எனக்கு நல்லதொரு நண்பன் என்று கூறுமளவுக்கு ஏராளமான அனுபவப் பாடங்கைளை கற்றுத்  தந்திருக்கின்றது.

ஆழ்மனதை ஆட்டிப் படைக்கும்  சக்தியை சற்று அதிகரிக்கும் போதுதான் வெற்றியின் வாசணையை நுகர முடியும் என்பது எனது தனிப்பட்ட அனுபவக் கருத்து , இதனுடன் எத்தனை பேர் உடன்படுவார்கள்  என்பதுதான்  ஐயம்.

-தொடர்ந்து  கதைப்போம்-









Creative Commons License
manathilpaddathu by manathil-paddathu.blogspot.com is licensed under a Creative Commons Attribution-NoDerivs 3.0 Unported License.
Related Posts Plugin for WordPress, Blogger...