ஒருவேளை நான் தோற்றுப் போனால் ???

“முயற்சி செய்யாதவனுக்கு கடவுள் கூட உதவி செய்ய மாட்டார்” எனும் பொன்மொழி என்னுள்  சற்று அதிகமாகவே வித்திடப்பட்டுள்ளது என்றுதான் கூற வேண்டும்.

காரணம்,
 
என்னை நான் நொந்து கொள்ளும் பல சந்தர்பங்களில் என்னுடைய இயலாமைக்கான ஒரே ஒரு  காரணமாக என்னால் அடையாளப்படுத்தப்பட்டது ------

ஒரு வேளை நான் தோற்றுப் போனால்” என்கின்ற கொடிய வியாதியாகிய “பயம்”.

இவ்வுலகில் ஏராளமான சாதனைகள் நிகழ்த்தப்படாமலேயே இருப்பதற்கான காரணங்களில் தலையானது “பயம்” .  ஒரு வேளை நான்  தோற்றுப் போனால் என்கின்ற பயமே, எமது பல சாதனைகளுக்கு முட்டுக் கட்டையாக அமைந்து விடுகின்றது. 

 செய்து தோற்றுப் போவதை விட  முயற்சி செய்யாமலேயே என்னால் இது முடியாது என்று கூறி ஒதுங்கிப் போகும் மனோபாவமே எம்மில் பெரும்பாலானோருக்கு இருக்கின்றது. தோற்றுப் போவதென்பது ஒரு அனுபவமே அது நிச்சயம் வெற்றிக்கான அடித்தளத்தையே தரும் என்பதில் எனக்கு துளியும் ஐயமில்லை. 

சுமார்  ஐந்து வருடங்களுக்கு முன்னர் என்னால் பயத்தின் காரணமாக முயற்சி செய்யாமல் ஒதுங்கிப் போனதொரு விடயம் ஏற்படுத்திய  இழப்புகளின் வடு இன்றும் கூட என்னை விட்டபாடில்லை. உண்மையில் அதன் வலியும் தாக்கமும்  நான் மரணிக்கும் வரை என்னுடன் பயணிக்கும் என்பது  சத்தியமே.

முயற்சி செய்யாமலேயே,  நான் தோற்று விடுவேன் என்று நினைத்தே எம்மில் பலர் அவர்களது ஆயுளில் எந்தவொரு முயற்சியும் எடுக்காமலேயே மரணித்து விடுகின்றனர். 

ஒரு சிலரே

 “எதுவானாலும் ஒரு கை பாப்போம், என்ன உசுரா போப்போது” என்று முயற்சி செய்கின்றனர். அதில் அவர்கள் வெற்றி பெறுகிறார்களா? இல்லையா ?? என்பது விடயமல்ல. முயற்சி செய்கிறார்களே அதுதான் விடயம், அதுதான் என்னைப் பொறுத்தமட்டில் நிஜமான  வெற்றி.

“ஏன் நீ மற்றவனுக்கான  வாழ வேண்டும் ??? உனக்காக ஒரு நாள் வாழந்து பார் வாழ்க்கையின் ஆழம் புரியும்”. என்பதுதான்  காலம் காலமாக நம்மால் சொல்லப்பட்டு வரும் ஒரு வாழ்வியல் தத்துவம். 

உண்மையில் எம்மில் பலபேர் மற்றவனுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதுதான் எமது முயற்சிக்கு முதல் எதிரியாகவும் முட்டுக்கட்டையாகவும் அமைந்து விடுகின்றது. அடுத்தவனுக்காகவே வாழ்ந்து  அடுத்தவனுக்காகவே  மரணிப்பதுதான் வாழ்க்கையா ?? கொஞ்சம் சிந்திக்கலாமே ???

“நான் ஒரு வேளை தோற்றுப் போனால் மற்றவன் என்னைப் பற்றி என்ன நினைப்பான்”  என்கின்ற பய மனோபாவம்  என்னுடன் சேர்த்து பல பேரை தொற்றிக் கொண்டிருக்கின்றது என்பதுதான் எம்மில் பலர் அறியாத உண்மையாகும். 

இதிலிருந்து விடுபட்டு எப்போது ஒருவன் வெளியேறி விடுகிறானோ அன்றிலிருந்து அவனது வெற்றிக்கான அடித்தளம் இடப்படுகின்றது என்றுதான்  அர்த்தம். நிச்சயமாக வாழ்க்கையில் தோற்றுப் போவதென்பது ஒரு விடயமல்ல ஆனால் முயற்சி செய்யாமலேயே தோற்றுப் போவதுதான் கவனிக்கப்பட வேண்டிய மற்றும் களையப்பட வேண்டியதொரு விடயமாகும்.


- தொடர்ந்தும்  கதைப்போம்  இதுபோலவும் -














No comments:

Post a Comment

Creative Commons License
manathilpaddathu by manathil-paddathu.blogspot.com is licensed under a Creative Commons Attribution-NoDerivs 3.0 Unported License.
Related Posts Plugin for WordPress, Blogger...