மோட்டார் சைக்கிளும் நானும்

மோட்டார் சைக்கிள் ஆசை துளிர்விட ஆரம்பித்தது என்னுடைய பாடசாலைப் பருவத்தில்தான்.மோட்டார் சைக்கிள் என்றால் அதன் மீது அந்தளவு மோகம் என்னிடத்திலே காணப்பட்ட  காலமென்றும் கூடச் சொல்லலாம்.ஆசை இருந்ததே தவிர ஓடுவதற்கு சந்தர்ப்பங்கள் கிடைத்ததில்லை.மற்றவருடைய மோட்டார் சைக்கிளை ஓடுவதற்கும் மனமில்லை அதனால் மோட்டார் சைக்கிளை எவ்வாரு ஓட்டுவது என்ற போதுமான அறிவு , அனுபவம் என்னிடத்திலே சற்று மந்தமாகவே இருந்தது.பாடசாலை நண்பர்களிடத்தில் ஒரு பந்தாவை தக்கவைப்பதற்காக சிறு சிறு பொய்களும் என்னிடத்திலே இருந்து மோட்டார் சைக்கிளை ஓட்டிய அனுபவமாக சென்றடைந்ததை இன்று கூட என்னால் மீட்டிப்பார்க்கும் போது பசுமை கலந்ததொன்றாகவே இருக்கின்றது.

ஏழாவது கியரிலே சைக்கிளை ஓட்டினேன் ” என்ற பொய்யை இன்று நினைத்தால் கூட சிரிப்புத்தான் வருகின்றது.பாடசாலைக் காலங்களில் எவரொருவராலும் பொய் சொல்வதை தவிர்த்துக் கொள்ள முடிவதில்லை ஏனென்றால் அது ஆசைகளுக்கும் , பாராட்டுக்கும் ஏங்கும் பருவம் என்றதாகையால்.அதிலும் பெண்கள் சொல்லும் பொய்யிருக்கே ! அடடா சும்மா ஒரு கலக்கு கலக்கும்.பொய்யென்று தெரிந்தும் அதை நம்பும் பருவம்தான்  அதுவென்றால் அதற்கான மாற்றுக்கருத்துக்களும் குறைவாகத்தானிருக்கும்.

சொந்தமாக சைக்கிளை வாங்கி ஓட்ட வேண்டும் என்ற ஆசையும் என்னை மீண்டும் ஆட்கொண்ட காலங்கள்  உயர்தரத்தின் போதுதான்.அம்மாவிடம் ஒரே நச்சரிப்பு “மோட்டர் சைக்கிள் வாங்குவது” பற்றித்தான்.“கொஞ்சம் பொறுமையா இரு !! காசு வரட்டும்” அம்மா கூறும் பதில். மனமிருக்குதே அது குரங்கை விட ரொம்ப மோசமானது.எப்படியாவது வாங்கி ஓட வேண்டும் என்ற ஆசை மட்டுமே என்னுள் உள்ளார்ந்தமாக ஓடிக்கொண்டிருந்தது.இனி என்னுடைய நச்சரிப்பு அப்பா பக்கமும் தாவியது. பாவம் அப்பா !! நான் எதை வேண்டும் என்று சொன்னாலும் முகம் சுழிக்காமல் வாங்கித்தருவதையே வழக்கமாக்கி விட்டார் நானும் அதையே அவரிடமிருந்து எதிர்பார்ப்பேன்.

“எல்லார புள்ளைகளும் சைக்கிள் ஓடுது , நம்முட புள்ளய்க்கும் ஒண்டு வாங்கிக் கொடுக்கத்தான் வேனும்” அம்மா-அப்பாவின் உரையாடல் இறுதியில் எனக்குமொரு சைக்கிளை சொந்தமாக்கியது , அப்பாவின் பணத்தில். புது சைக்கிளை ஓட்டுவதற்கு போதுமான அனுபவம் இருந்திருக்கவில்லை என்றாலும் வாங்கிய முதல் நாளே தொண்ணூறு வீதம் கற்றுக் கொண்டேன் சொந்தமாக. “முடியாதது  ஒன்றுமே இல்லை” என்ற கருத்தினது வேறூன்றலின் வெளிப்பாட்டின் பிரதிபலிப்பாகக் கூட இருந்திருக்கலாம் அது.

ஏதாவது ஒரு பொருள் என்னிடம் இருந்தால் அதைப்பற்றி போதுமான அறிவைப் பெற்றிருக்க வேண்டுமென்ற கொள்கையை சிறு வயது முதலே கடைப்பிடிப்பதை பழக்கமாக்கிவிட்டேன்.அதன் தாக்கம் மோட்டார் சைக்கிளையும் விட்டு வைக்கவில்லை.

அப்பாவை பின்னிருக்கையில் உட்கார வைத்து வேகமாக  ஓட்டும் போது, அப்பாவின் கண்டிப்பான கருத்துக்களை ஏனோ , தானோ என்றுதான் கேட்டது மனம். “மெதுவாக ஓட வேண்டும் , ஒவ்வொரு சந்திக்கும் ஹோன் அடிக்க வேண்டும், மேலும் பல காரசாரமான அட்வைஸ்கள்”.ஏன்டா??  இவரை  ஏத்தினோம் என்று கூட நினைத்ததுண்டு சில நேரங்களில். மறு கணம் நம் நல்லதுக்குத் தானே சொல்கிறார் என்று  கூட  நினைத்ததுமுண்டு.

ஒருவாறாக மோட்டார் சைக்கிள் ஆசை என்னுள்ளிருந்து தன்னை விடுவித்துக் கொண்டது, ஆனால் முழுமையாக அல்ல.அப்பாவின் பணத்தில் முதன் முதலாக வாங்கிய சைக்கிள் எனும் போதுதான் மனதுக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது அதை விற்கும் போது.


-தொடர்ந்து கதைப்போம்-

                                                         


















Creative Commons License
manathilpaddathu by manathil-paddathu.blogspot.com is licensed under a Creative Commons Attribution-NoDerivs 3.0 Unported License.
Related Posts Plugin for WordPress, Blogger...